விடுமுறை தினமான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- இன்று காலை 11 மணி வரை படகு போக்குவரத்து இயக்கப்பட வில்லை
- சுற்றுலா பயணிகள் படகு துறையில் காத்திருந்தனர்.
கன்னியாகுமரி :
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 11 மணி வரை படகு போக்குவரத்து இயக்கப்பட வில்லை இதனால் சுற்றுலா பயணிகள் படகு துறையில் காத்திருந்தனர். கடல் சகஜநிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து தொடங்கியதை தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று பார்த்தனர். இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.