நாகர்கோவில் அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
- பிணமாக கிடந்தவர் தக்கலை மேல்பாறையை சேர்ந்த ரவிராஜ் (வயது 29) என்பது தெரியவந்தது.
- தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கும், இரணியல் ரெயில் நிலையத்துக்கும் இடையே உள்ள கண்டன்விளை ரெயில்வே கேட் அருகே நேற்று இரவு ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கு மார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிணமாக கிடந்தவர் தக்கலை மேல்பாறையை சேர்ந்த ரவிராஜ் (வயது 29) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வெளியே சென்று வருவதாக தன் தந்தையிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ரவிராஜை பல இடங்களில் தேடி வந்தனர்.
ஆனால் ரவிராஜ் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரவிராஜ் ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.