உள்ளூர் செய்திகள்

படகுகள் உருவாக்கும் கம்பெனி பொருட்கள் திருடிய வாலிபர் கைது

Published On 2023-09-26 07:13 GMT   |   Update On 2023-09-26 07:13 GMT
  • சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

கிள்ளியூர் :

புதுக்கடை அருகே உள்ள இனயம் கடற்கரை பகுதி இனியா நகரில் படகுகள் உருவாக்கும் கம்பெனி உள்ளது. இதை சிதறால் பகுதியை சேர்ந்த ராபர்ட் (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 23-ந்தேதி இரவு பணி முடிந்து கம்பெனியை மூடிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை மறுபடியும் வந்து பார்த்தபோது, கம்பெனியின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

கம்பெனியின் உள்ளே சென்று பார்த்தபோது, படகு தயாரிக்க பயன்படுத்தும் கட்டர், மெஷின், சுவிட்ச் போர்டு, வயர் உட்பட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக புதுக்கடை போலீசில் ராபர்ட் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் திருட்டில் ஈடுபட்டவர் கண்டன்விளை பகுதி சித்தன் தோப்பை சேர்ந்த ஜெஸ்டின் ஆன்றோ (36) என்பது தெரியவந்தது. இவர் தற்போது இனயம் மாதா காலனியில் வசித்து வருகிறார். மேலும் இனயம் புத்தன்துறை ஊராட்சியில் ஒப்பந்த முறையில் குப்பை அள்ளும் பணி செய்து வருகிறார் எனவும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கடை பகுதி கடலோர கிராமங்களில் உள்ள மேலும் பல படகு தயாரிப்பு கம்பெனிகளில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளதாக ஏற்கனவே புதுக்கடை போலீசில் புகார் உள்ளது. அந்த திருட்டு சம்பவங்களிலும் ஜெஸ்டின் ஆன்றோ சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News