குலசேகரம் அருகே பெண் மீது ஆசிட் வீசிய நபர்களை பிடிக்க 2 தனிப்படை
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே உண்ணியூர்கோணம் மாடத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா (வயது 46). இவரது மகன் சுபாஷ் வயது (26).
இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் வந்து இருக்கிறார். லதா சித்திரங்கோடு அருகே ரைஸ் மில் நடத்தி வருகிறார். நேற்று இரவு 7.30 மணி அளவில் உண்ணியூர்கோணம் பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போதுமோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அதிர்ச்சி அடைந்த லதா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு முதலுதவி அளித்து, குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்து குலசேகரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் லதா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை அடை யாளம் காணும் விதமாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. ஆய்வு செய்து வருகிறார்கள். லதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை காரணமாக ஆசிட் வீசப்பட்டதா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் நேரடியாக சென்று அந்த பகுதியை ஆய்வு செய்தார்.