கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 65 ஆயிரம் குடும்பத்தலைவிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது
- 2-வது நாளாக இன்றும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகம்
- நேற்று மாவட்டம் முழுவதும் 400 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடக்கிறது.
முதல் கட்ட முகாம் நடைபெற உள்ள பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று வீடு வீடாக சென்று வழங்கினார்கள். நேற்று மாவட்டம் முழுவதும் 400 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கனை வழங்கினார்கள். முதல் நாளில் குமரி மாவட்டத்தில் 65 ஆயிரம் குடும்பத்தலைவிகளுக்கு விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று 2-வது நாளாகவும் அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்கி வருகிறார்கள். இந்த விண்ணப்ப படிவங்கள் நாளையும், நாளை மறுநாளும் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து 24-ந்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த சிறப்பு முகாமில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும் குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு கார்டு மற்றும் பேங்க் பாஸ்புக் ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும். இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2-ம் கட்டமாக முகாம் நடைபெறும் பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடுத்த கட்டமாக விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.