உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் மாணவிகள்-இளம்பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்

Published On 2023-07-21 11:26 GMT   |   Update On 2023-07-21 11:26 GMT
  • பொதுமக்கள் அதிர்ச்சி
  • இந்த கும்பல் மாபெரும் மோசடி கும்பல் என தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட விவசாயி ஒருவரின் மகள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் மாணவிடம் இருந்த செல்போனுக்கு அவ்வப்போது குறுந்தகவல்கள் வந்து கொண்டிருந்துள்ளது. அந்த குறுந் தகவலில் நீ அழகாக இருக்கிறாய் என்றும், உன்னை நான் காதலிக்கிறேன் என்றும் தகவல்கள் வந்து கொண்டே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் மாணவியும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் தனது பங்கிற்கு பதிலை அனுப்பி உள்ளார்.

ஒரு கட்டத்தில் இருவரும் பல மணி நேரம் தங்களது தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு, காதலையும் வளர்த்து கொண்டனர். மேலும் அந்த வாலிபர் தான் சாப்ட்வேர் என்ஜினீயர் என்றும் தனது நண்பர்களிடமும் நீ நட்பாக பேசு எனவும், கூறி அவரது நம்பரை சக நண்பர்களுக்கும் போன் நம்பரை பகிர்ந்து உள்ளார். சக நண்பர்களும் இவரிடம் ஆபாசமாக பேச தொடங்கியுள்ளனர்.

இதில் மிரண்டு போன மாணவி தனது ஆண் நண்பரிடம் தகவலை கூறியுள்ளார். இதற்கு அந்த ஆண் நண்பர் கவலைப்படாதே உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி, வீட்டை விட்டு வந்து விடு என கூறியுள்ளார். மேலும் வீட்டிலிருந்து பணத்தையும் நகையையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

மாலையில் வீடு வந்து சேராத மாணவியின் தந்தை, உறவினர்கள் வீடுகள் மற்றும் தெரிந்தவர்கள் வீடு ஆகியவற்றில் தேடிப் பார்த்துள்ளார். மாணவி எங்கு சென்றார் என எந்த துப்பும் துலங்கவில்லை. அவரது போனுக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வேறு வழி இல்லாமல் மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக விரைந்து சென்று அந்த வாலிபரின் வீட்டை சோதனை செய்தபோது வாலிபர் சர்வ சாதாரணமாக தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், தான் வீட்டில் இருப்பதாகவும் கூறினர்.

அதேபோன்று அந்த வாலிபரின் பெற்றோரும் உறுதியாக தங்களது மகன் வீட்டில் தான் இருக்கிறான் என தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசார் விசாரணையில் இறங்கியபோது தான் தெரிந்தது. அது ஒரு தனி நபர் அல்ல அது ஒரு கும்பல், அந்த கும்பல் இளம்பெண்களை மற்றும் மாணவிகளை காதலித்து ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் என தெரியவந்தது.

இதையடுத்து அந்த கும்பலை கைது செய்ய மாணவி இருக்கும் இடமான சென்னை நோக்கி போலீஸ் படை விரைந்தது. இதை தெரிந்து கொண்ட அந்த கும்பல் மாணவியை அங்கு விட்டு விட்டு தலைமறைவானது. மாணவியை மீட்ட போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அந்த வாலிபர் நண்பர்களின் போன் நம்பர்களை கொடுத்து வாலிபர்களிடம் பேச வைத்தது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் மாபெரும் மோசடி கும்பல் எனவும் தெரியவந்துள்ளது. மாணவியை பெற்றோருடன் அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீசார், அந்த கும்பல்களை சேர்ந்தவர்கனின் முழு விவரங்களையும் சேகரித்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண்கள் மற்றும் மாணவிகளை குறிவைத்து காதலித்து ஏமாற்றும் கும்பலால் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News