குமரி மாவட்டத்தில் இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்
- 23 இடங்களில் இருந்து புறப்பட்டு நாகர். அண்ணா விளையாட்டு அரங்கம் வந்தது
- இந்த ஆண்டு உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமரி:
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 26-ந்தேதி உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகத்தொண்டு நிறுவனங்களான திருப்புமுனை போதை நோய் நலப்பணி, போதை நோய் பணிக்குழு, புது வாழ்வு மையம் ஆகியவை இணைந்து கன்னியாகுமரி, குளச்சல், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட 23 இடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பங்கேற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர்கள், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதியை ஏற்றி தொடர் ஓட்ட வீரர்களிடம் வழங்கினார்கள்.
பின்னர் இந்த ஜோதி ஓட்டம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், போலீஸ் டி.எஸ்.பி.ராஜா, குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்குனர் அருட்பணியாளர் நெல்சன், ஜோதி ஓட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசிறில், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணை தலைவர் ஜெனஸ் மைக்கேல், வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ், முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஜோதி ஓட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மேயர் மகேஷ் ஆகியோர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடினர். இதில் பள்ளி-கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர். காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து புறப்பட்ட ஜோதி ஓட்டம் விவேகானந்தபுரம், கொட்டாரம், பொற்றையடி, ஈத்தங்காடு, வழுக்கம்பாறை, சுசீந்திரம், இடலாக்குடி, கோட்டாறு, மீனாட்சிபுரம் மணிமேடை சந்திப்பு வழியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது. அங்கு உலக போதை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.
குளச்சல் காணிக்கை அன்னை மருத்துவமனை புதுவாழ்வு இல்லம் சார்பில், அண்ணாசிலை சந்திப்பில் இருந்து ஜோதி ஓட்டம் புறப்பட்டது. புதுவாழ்வு இல்ல பணியாளர் கிறிஸ்டி வரவேற்று பேசினார். குளச்சல் மீன்துறை ஆய்வாளர் கனிசெல்வம் வாழ்த்துரை வழங்கினார். புதுவாழ்வு இல்ல இயக்குனர் அருட்சகோதரி, ஜோதியில் தீபம் ஏற்றினார்.
நகர்மன்ற தலைவர் நசீர் கொடியசைத்து ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அருட்சகோதரிகள், புதுவாழ்வு இல்ல மக்கள், பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். ஜோதி ஓட்டம், திங்கள்நகர், இரணியல், பரசேரி, சுங்கான்கடை, பார்வதிபுரம் வழியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் சென்றடைந்தது.
ஆரல்வாய்மொழி முத்துநகர் பகுதியில் இருந்து புறப்பட்ட ஜோதி ஓட்டத்தை தனி துணை கலெக்டர் திருப்பதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தோவாளை தாலுகா தாசில்தார் வினை தீர்த்தான் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஜோதி ஓட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர். முத்து நகர், தோவாளை, வெள்ளமடம், வடசேரி வழியாக இந்த ஜோதி ஓட்டம், அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது.
போதை ஓழிப்பு குழுநாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடந்த போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில், குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் போதை ஒழிப்பு தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் போதை குறித்.து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான் போதையை ஒழிக்க முடியும்.
குமரி மாவட்டம் போதையில்லா மாவட்டமாக மாற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போதை பொருட்களை பயன்படுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே போதை பொருட்கள் பயன்படுத்து வோருக்கு பல்வேறு அறிவுரைகளை கூற வேண்டும். அவர்களை நல்வழிப்படுத்துவது நமது கடமையாகும். போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் அவரது ரகசியங்கள் பாதுகாக்கப்படும். விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், விளையாட்டு அதிகாரி ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறந்த தன்னார்வலர்களுக்கு பரிசுகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.