அஞ்சுகிராமம் அருகே தலை துண்டித்த நிலையில்வாலிபர் பிணம்
- இருச்சக்கர வாகன விபத்தில் சிக்கி இறந்தாரா? போலீசார் விசாரணை
- சாலையின் ஓரம் வாலிபர் ஒருவர் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.
கன்னியாகுமரி:
அஞ்சுகிராமத்தை அடுத்த காணிமடம் பகுதியில் ஏராளமான தொழிலாளிகள் வசித்து வருகிறார்கள்.
இன்று காலை தொழிலாளிகள் சிலர் காணிமடம் பகுதியில் நடந்து சென்றனர். அப்போது சாலையின் ஓரம் வாலிபர் ஒருவர் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரை சுற்றி ரத்தம் உறைந்து கிடந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளிகள் இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இறந்து கிடந்த வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் காணிமடம் பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.
இதில் பிரகாஷ் நேற்றிரவு நண்பரின் இருச்சக்கர வாகனத்தை வாங்கி கொண்டு வெளியே சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள காண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பிரகாஷ், நண்பரின் இரு சக்கர வாகனத்தில் காணி மடம் சாலையில் வேகமாக செல்லும் போது விபத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் என தெரிகிறது.
இருச்சக்கர வாகனம், சாலையின் சென்டர் மீடியனில் மோதி அவரது தலை துண்டாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காணிமடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.