குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது.
- சுருளோட்டில் கடந்த 3 நாட்களாகவே கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்தாலும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகிறது.
நேற்று காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில், பூதப்பாண்டி, கன்னிமார், ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. மலையோர பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது. சுருளோட்டில் கடந்த 3 நாட்களாகவே கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்றும் அங்கு அதிகபட்சமாக 53.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 16.2, பெருஞ்சாணி 43, சிற்றாறு 1-5, பூதப்பாண்டி 17.6, கன்னிமார் 12.8, நாகர்கோவில் 3, சுருளோடு 53.6, தக்கலை 2.2, பாலமோர் 35.6, முள்ளங்கினாவிளை 52, அடையாமடை 2.2, முக்கடல் 11.6.
திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை நீர்மட்டம் இன்று காலை 38.22 அடியாக இருந்தது. அணைக்கு 220 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. அணைக்கு 255 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.