திருவட்டார் அருகே முன்னாள் ராணுவ வீரர் குண்டர் சட்டத்தில் கைது
- போலீஸ் நிலையத்தில் இருந்து மெர்லின்ட்ராஜ் தனது நண்பருடன் திருடிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
- வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு, கொலை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 24 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.
திருவட்டார்:
திருவட்டார் அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் மெர்லின்ட்ராஜ் (வயது 37). ராணுவத்தில் பணியாற்றிய இவர், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் டிஸ்மிஸ் செய்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு, நகைபறிப்பு போன்ற வற்றில் ஈடுபட்டுள்ளார். கொள்ளை, அடிதடி உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டதாக இவர் மீது தக்கலை, திருவட்டார், மார்த்தாண்டம், கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையில் ஒரு சம்பவத்தின் போது இவர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் பழுதானதால், அதனை சாலையில் விட்டுச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்தனர். அதனை போலீஸ் நிலையத்தில் இருந்து மெர்லின்ட்ராஜ் தனது நண்பருடன் திருடிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மார்த்தாண்டம் திக்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த மெர்லின்ட்ராஜை கைது செய்தனர். வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு, கொலை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 24 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இதனால் அவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து மெர்லின்ட்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.