கன்னியாகுமரியில் சுற்றுலா பஸ் மோதி வெளிநாட்டு கப்பல் ஊழியர் பலி
- இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் லிகோரி. இவருடைய மகன் டெனி லிகோரி (வயது 23). இவர் வெளிநாட்டில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு திரும்பி னார். நேற்று இரவு 10 மணி அளவில் டெனிலிகோரி தனது இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பெரியார் நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கேரளா சுற்றுலா பஸ் பெரியார் நகருக்கு செல்வதற்காக திரும்பியது.
அப்போது டெனிலிகோரி சென்ற இரு சக்கரவாகனம் மீது அந்த சுற்றுலா பஸ் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட டெனிலிகோரி சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கேரளா சுற்றுலா பஸ்சை ஓட்டி வந்த பத்தனம் திட்டா, முடியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் பினுகுமார் (46) என்பவரை கைது செய்தனர்.