உள்ளூர் செய்திகள்

மாலைமலர் செய்தி எதிரொலி வேப்பமூடு மாநகராட்சி பூங்காவில் மேயர் மகேஷ் இன்றுஅதிரடி ஆய்வு

Published On 2023-07-19 10:03 GMT   |   Update On 2023-07-19 10:03 GMT
  • சேதமடைந்து கிடந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க உத்தரவு
  • தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

கன்னியாகுமரி:

நாகர்கோவில் வேப்ப மூடு பூங்காவை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுவதாகவும் குப்பைகள் அதிக அளவு உள்ளதாகவும் மாலைமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மேயர் மகேஷ் இன்று காலை வேப்பமூடு பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சேதமடைந்து காணப்பட்ட விளையாட்டு உபகரணங்களை பார்வையிட்ட அவர், இதை உடனடியாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பூங்கா முழுவதும் சுற்றி ஆய்வு மேற்கொண்டபோது பூங்காவிற்குள் புதர்கள் வளர்ந்து காணப்பட்டது. அதை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டார். அங்கு உள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி காணப்பட்டதை பார்த்த அவர், தினமும் அகற்ற அறிவுறுத்தினார்.

கழிவறைக்கு சென்று பார்வையிட்ட மேயர் மகேஷ், தினமும் சுத்தம் செய்து பராமரிக்க உத்தர விட்டார். கழிவறையின் மேல் வளர்ந்துள்ள மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து பூங்காவிற்கு வெளிப்புறம் உள்ள நாஞ்சில் பஜாரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு கடையின் முன் பகுதியில் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து செட்டுகள் அமைத்திருந்தனர். மேலும் தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் தற்காலிக கடைகள் அமைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். நாஞ்சில் பஜாரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேப்பமூடு பூங்காவிற்கு நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து செல்கிறார்கள். இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் குழந்தைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு சில விளையாட்டு உபகரணங்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளது.

அதை உடனடியாக சீரமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பூங்காவில் உள்ள குப்பைகளை தினமும் அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாஞ்சில் பஜாரில் ஆக்கிரமிப்புகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற கடைக்காரர்களுக்கு இன்று ஒரு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றா விட்டால் மாநகராட்சி சார்பில் நாளை ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 53 பூங்காவையும் புணரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்ரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News