மார்த்தாண்டம் சாங்கையில் உள்ள பால்மா மக்கள் அமைப்புகள் 19-வது ஆண்டு தொடக்க விழா
- திரைப்பட பாடல் ஆசிரியர் அறிவுமதி பங்கேற்பு
- பால்மா செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் வணிக மைய வாகனத்தை அர்ப்பணித்தார்.
மார்த்தாண்டம்:
மார்த்தாண்டம் சாங்கையில் அமைந்துள்ள பால்மா மக்கள் அமைப்புகளின் 19-வது ஆண்டு தொடக்க விழா பால்மா அரங்கத்தில் நடைபெற்றது. அன்பையன் தலைமை தாங்கினார். செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் முன்னிலை வகித்தார். பால்மா இசைக் குழுவினர் இறைவணக்கம் பாடினார். சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றினார்கள். இயக்குனர் செல்லன் வரவேற்று பேசினார். பால்மா இயக்குனர் ஜோதி விமலாபாய் அறிக்கை வாசித்தார். அதனை தொடர்ந்து சிறுவர்களுக்கான நடனம் நடைபெற்றது.
பின்னர் உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் விஜிலா, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசீலன், காட்டத்துறை ஊராட்சி தலைவர் இசையாஸ், பால்மா சட்ட ஆலோசகர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பால்மா கூட்டமைப்பின் தலைவர் ஐடா குளோரி பாய் சிறப்பு பாடல் பாடினார். பால்மா செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் வணிக மைய வாகனத்தை அர்ப்பணித்தார். பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரைப்பட பாடல் ஆசிரியர் அறிவுமதி பேசியதாவது:-
பால்மா அமைப்பு என்பது பெண்களை ஒன்றிணைத்த ஒரு பெரிய அமைப்பாகும். மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் இருக்கும் மனித வளத்தை மிக சிறப்பாக வெளிக்கொண்டு வந்த பெருமை இந்த அமைப்பின் நெறிமுறையாளர் அன்பையன் அவர்களையே சாரும். இன்றைக்கு இந்த அரங்கம் நிறைந்து காணப்படுகிறது என்றால் அதற்கு காரணம் 41 ஆண்டு காலம் நீங்கள் விதைத்த விதைதான்.
இந்த பால்மா அமைப்பானது 451 சுய உதவி குழுக்கள் மற்றும் பனை தொழிலாளர் பேரவை என்ற பெயரில் 102 மன்றங்களை உருவாக்கி மாவட்டத்தின் அடையாளமாய் புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர். இது மட்டுமல்லாமல் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட இளம் சிறார்களுக்கு தொடர் உதவி தொகைகள், முதியோர் ஓய்வு உதவி திட்டம், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மகளிர் திருமண வைப்பு நிதி உதவி திட்டம், ஒருங்கிணைந்த பிற மேம்பாட்டு பணிகள் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். ஒடியல் கூழ் இலங்கையில் தயாரிக்கப்படும் ஒடியல் கூழ் பனை மரப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சுவையான உணவு பொருளாகும். இந்த உணவு பொருள் தமிழ்நாட்டில் அதுவும் முதலில் குமரி மாவட்டத்தில் தயாரிக்கப் பட்டு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பால்மா கூட்டமைப்பு தலைவர் ஐடா குளோரி பாய் நன்றி கூறினார்.