பள்ளியில் சேர்க்காமல் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
- தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
- 04652-229077 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
நாகர்கோவில், அக்.27-
நாகர்கோவில் (அம லாக்கம்) தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர் துறை ஆணையருமான அதுல் ஆனந்த் உத்தரவின்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர், சைல்டு லைன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகியோருடன் செண்பகராமன்புதூர், தடிக்காரன்கோணம், பொன்மனை, சுருளோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது தொடர்பாக ஆய்வின்போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குறைந்த பட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரையும் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்து வது தெரியவந்தால் 1098 என்ற எண்ணிலும், 04652-229077 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.