குமரியில் காய்ச்சல் அதிகரிப்பு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த நோயாளிகள்
- சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
- சில நேரங்களில் பலத்த மழையாகவும் பெய்கிறது.
தக்கலை:
குமரிமாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில சமயம் சாரல் மழையாகவும், சில நேரங்களில் பலத்த மழையாகவும் பெய்கிறது. அதே நேரத்தில் பகலில் வெயில் அடிக்கிறது. இவ்வாறு சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சல் பாதித்து அவதிப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால கடந்த 30-ந்தேதி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. ஒரு ஒன்றியத்தில் 3 இடங்களி லும், நாகர்கோவிலில் மாநகராட்சி பகுதியில் 4 இடங்களிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது. அதில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டது.
இதுகுறித்து திருவி தாங்கோடு சுகாதார துறை அதிகாரி ராமதாசிடம் கேட்ட போது, 'தக்கலை சுற்று வட்டார பகுதியில் பெரும் பாதிப்பு இல்லை. இருப்பினும் முகாம் நடத்தப்பட்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுகிறது' என்றார்.
இந்நிலையில் நேற்று தக்கலை அரசு மருத்துவ மனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஒரே நேரத்தில் நூற்றுக்கும மேற்பட்ட நோயாளிகள் திரண்டனர். அவர்கள் வெகுநேரம் காத்திருந்து மருந்து வாங்கி சென்றனர். மேலும் மாத்திரைகள் வழங்கும் இரண்டு பிரிவில் ஒன்று மட்டுமே செயல்பட்டதால் நோயாளிகள் வெகுநேரம் வரிசையில் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.