உள்ளூர் செய்திகள்

பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக கொட்டாரம் புத்தனாறு கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறப்பு

Published On 2023-07-07 07:29 GMT   |   Update On 2023-07-07 07:29 GMT
  • விவசாயிகள் மகிழ்ச்சி
  • அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடியான கும்பப்பூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக கொளுத்திய கடும் வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தன. இந்த நிலையில் முதல் போக சாகுபடியான கன்னிபூ சாகுபடிக்காக கால்வாய்கள் தூர்வாரப்படாமல் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது.

இதில் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் தூர்வாரப்படாததால் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கால்வாயை தூர்வாரி கடைவரம்பு பகுதி வரை தண்ணீர் தடங்கல் இன்றி வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் எனப்படும் என்.பி. கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்தது. இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பால் அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால்வாய் மற்றும் பள்ளக்கால்வாய் பகுதி வரை 24 கிலோ மீட்டர் 560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடந்து முடிந்தது.

இதைத்தொடர்ந்து விவசாய பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கொட்டாரம் புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொட்டாரம் பகுதியில் உள்ள புத்தனாறு கால்வாயில் தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து கொட்டாரம் கடைவரம்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கன்னிபூ சாகுபடி விவசாயப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

Tags:    

Similar News