கடலூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா வேலை வாய்ப்பு முகாம்
- 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தினர்.
- மேயர் சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர்.
கடலூர்:
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கடலூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஊரக இளைஞர்கள், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, தொரப்பாடி, வடலூர் பகுதியை சேர்ந்த மகளிர் திட்டத்தில் தொழில்திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களும், மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த பல்வேறு இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தினர். இதையடுத்து நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். இதில் வட்டார இயக்க மேலாளர் சத்திய நாராயணன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, வக்கீல் கார்த்திக், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், அருண் மற்றும் மகளிர் திட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.