பார்வையற்ற முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்
- கரூரில் பஸ் ஸ்டாண்டில் மயங்கி கிடந்தார்
- போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்
கரூர்,
கரூரில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கு மேல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் கரூர் மாநகரப் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத கண்பார்வை இழந்த மாற்றுத் திறன் கொண்ட 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்திருந்தார். ரவுண்டானா பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கண்டும் காணாமல் சென்ற நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போக்குவரத்து போலீசார்கள் மற்றும் சட்டம் ஒழுங்குபோலீஸ்காரர் அவரை அடையா ளம் கண்டு, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பெயரில் அப்பகுதிக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலமாக அந்த முதியவரை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத அந்த முதியவருக்கு உதவி செய்த மூன்று காவலர்களின் செயல்களை கண்ட பொதுமக்கள் `சபாஷ்' என்று பாராட்டினர்.