அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு நாங்கள் எதிரி - அண்ணாமலை
- அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு நாங்கள் எதிரி என்று கரூரில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்
- செந்தில்பாலாஜி கைதுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை
கரூர்,
கரூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரம்பலூரில் பா.ஜ.க . நிர்வாகியை தாக்கி பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தி.மு.க., பா.ஜ.க.வை பழிவாங்க ஆரம்பித்திருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க.வினர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கைது செய்யவில்லையென்றால் நாளை மறுநாள் பெரம்பலூரில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இதுவரை நடந்த யாத்திரையில் 6 தொகுதிகளை தள்ளி வைத்துள்ளோம். டிச, ஜனவரியில் இந்த யாத்திரை நடைபெறும். கர்நாடக நீர் பிரச்னையில் கர்நாடகா அரசுக்கு பாஜக தான் துணையாக இருப்பது எனக்கூறுவதில் உண்மையில்லை.
தமிழக பாஜகவை பொறுத்தவரை தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இந்த பிரச்னையில் யார், யாருக்கோ கடிதம் எழுதும் முதல்வர் மௌனம் சாதிப்பது எதற்கு எனத் தெரியவில்லை.
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படாததற்கு இன்னும் அவர் அமைச்சராகியிருக்கிறார், அவர் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கலாம், செந்தில்பாலாஜியின் தம்பி தலைமறைவாகியிருக்கிறார். தம்பியையே பிடிக்க முடியாத காவல்துறையினர் அண்ணன் வெளியே வந்து சாட்சியங்களை திரட்டினால் என்ன நியாயம் கிடைக்கும் என நீதிபதி கேட்டுள்ளார். இதனால் செந்தில்பாலாஜியின் கைதுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை, ஊழலுக்கு எதிரி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிரி. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கரூர் மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன், மாவட்டச் செயலாளர் ஆர்.வி.எஸ்.செல்வராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக கரூர் மாவட்டம் என்.புதூரைச் சேர்ந்த கனராஜ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் இறந்தபோது, அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் சிரமம் இருந்த நிலையில், பாஜகவினர் மற்றும் இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் மூலம் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து கனகராஜின் குடும்பத்தினருக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார்.