திண்டுக்கல்லில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல்
- பஸ் நிலையம் அதனைச் சுற்றியுள்ள ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்து வருகிறது
- வெயிலில் நீண்ட நேரம் குழந்தைகள் பிச்சை எடுப்பதால் அவர்களுக்கு நீர் இழப்பு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.குழந்தைகளின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேலை நிமித்தமாகவும், வியாபாரநிமித்தமாகவும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் பஸ் நிலையம் அதனைச் சுற்றியுள்ள ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்து வருகிறது.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சில பெண்கள் கையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு குழந்தைக்கு பால் வாங்க காசு கொடுங்கள் என்று கேட்டு பிச்சை எடுக்கின்றனர்.
பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பதால், பொதுமக்களும் பரிதாபப்பட்டு அதிக அளவில் உதவுகின்றனர். ஆனால், ஒரு கும்பல் பணத்துக்காக குழந்தைகளை பிச்சை எடுக்கப் பயன்படுத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது.மேலும் குழந்தைகள் பசிக்குது சாப்பிட காசு கொடுங்க என கெஞ்சும் காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது.மேலும் வெயிலில் நீண்ட நேரம் குழந்தைகள் பிச்சை எடுப்பதால் அவர்களுக்கு நீர் இழப்பு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.குழந்தைகளின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
இந்த கும்பல்கள் உண்மையிலேயே அவருடைய குழந்தைகள் வைத்து தான் பிச்சை எடுக்கிறார்களா அல்லது குழந்தைகளை திருடி வந்து பிச்சை எடுக்கிறார்களா என்பது தெரியவில்லை.ஆகவே குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல்கள் மீது அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.