உள்ளூர் செய்திகள்

முகநூல் காதலனை தேடி வந்த இளம்பெண் சரண்யா பெற்றோர் மற்றும் கேரள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்

முகநூல் காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த கேரள இளம்பெண்

Published On 2023-05-27 05:09 GMT   |   Update On 2023-05-27 05:09 GMT
  • சரண்யா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காதலனிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூறி உள்ளார்.
  • இளம்பெண் ஒருவர் பஸ் நிலையத்தில் தவித்து கொண்டு இருப்பதை பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

கோபி:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெரும்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி எலிசபெத். இவர்களது மகள் சரண்யா (26). பி.காம் பட்டதாரியான இவர் கடந்த 2 1/2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழகி வந்தார். நாளடைவில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

இதையடுத்து சரண்யா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காதலனிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூறி உள்ளார். மேலும் கோபிசெட்டிபாளையம் வருகிறேன் என்றும் கூறி உள்ளார். அதற்கு அந்த வாலிபர் சம்மதம் தெரிவித்து சரண்யாவை கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்துக்கு வர சொல்லி உள்ளார். மேலும் அங்கிருந்து உன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறி உள்ளார்.

இதை நம்பி இளம்பெண் சரண்யா கேரளாவில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்தார். நீண்ட நேரமாக பஸ் நிலையத்தில் காத்திருந்தும் முகநூல் காதலன் வரவில்லை. இளம்பெண் ஒருவர் பஸ் நிலையத்தில் தவித்து கொண்டு இருப்பதை பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது சரண்யாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் இடுக்கி மாவட்டம் பெருமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கேரள போலீசார் மற்றும் அவரது பெற்றோர் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் கோபிசெட்டிபாளையம் போலீசார் இளம்பெண் சரண்யாவை ஒப்படைத்தனர்.

மேலும் சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாதவர்களுடன் பழகி இது போல் ஏமாற வேண்டாம் என்று சரண்யாவுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

மேலும் சரண்யாவை திருமணம் செய்ய கோபிசெட்டிபாளையம் வரவழைத்த அந்த முகநூல் காதலன் யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News