உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு கத்தி வெட்டு:3 மகன்கள் கைது-தந்தைக்கு வலைவீச்சு

Published On 2023-10-07 09:25 GMT   |   Update On 2023-10-07 09:25 GMT
  • கிராமத்தின் சாலையில் 4 அடி ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சிப்பதாக அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
  • அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கருங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). இவர் தனது வீட்டை விரிவாக்கம் செய்து கட்டினார். கிராமத்தின் சாலையில் 4 அடி ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சிப்பதாக அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஊர் பிரமுகர்கள் கண்ணனிடம் பேசி, உங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் வீடு கட்டிக் கொள்ளுங்கள், சாலை ஆக்கிரமிக்காதீர்கள் என்று கூறினர். இருந்தபோதும் கண்ணன் தொடர்ந்து வீடு கட்டும் பணியை மேற்கொண்டார். அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பஞ்சாயத்து தலைவர் சசிக்குமாரிடம் (32) முறையிட்டனர். அவரும் வருவாய்த் துறையில் உள்ள நில அளவையரை அழைத்து வந்து கண்ணனுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தார். அப்போது கிராம சாலையில் 4 அடியை ஆக்கிரமித்து வீடு கட்டியது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு வீடு கட்டக்கூடாதென பஞ்சாயத்து தலைவர் அறிவுறுத்தி சென்றார். இதனை மீறி கண்ணன் மீண்டும் வீடு கட்டவே, ஊர் பிரமுகர்கள் கண்ணனை அழைத்து நேற்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கண்ணன், அவரது மகன்கள் பொன்மணி (25), வெற்றிவேல் (23), செல்வக்குமார் (19) ஆகியோருடன் வந்தார். 4 அடி ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிக்க ஊர் பிரமுகர்கள் சொன்னதால் ஆத்திரமடைந்த கண்ணன், தனது மகன்களை அழைத்துக் கொண்டு பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் வீட்டிற்கு நேற்று இரவு 10 மணிக்கு சென்றார். தான் கொண்டு சென்ற கடப்பாறை மூலம் பஞ்சாயத்து தலைவர் சசிக்குமாரின் வீட்டை இடிக்க முயற்சித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அவர்களை தடுத்து நிறுத்தினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் அவரது மகன்கள் கொடுவா கத்தியால் பஞ்சாயத்து தலைவரின் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் சசிக்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு கண்ணன் மற்றும் அவரது 3 மகன்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இது சம்மந்தமாக பொன்மணி, வெற்றிவேல், செல்வக்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணன் எங்குள்ளார் என்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News