கொடைக்கானலில் தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டிய நட்சத்திர ஏரி
- கொடைக்கானலில் மதியவேளையில் கருமேகங்கள் சூழ்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.
- ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
கொடைக்கானல்:
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலை மிதமான வெப்பம் நிலவி வந்த நிலையில் மதியவேளையில் கருமேகங்கள் சூழ்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.
குறிப்பாக அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணாசாலை, உகார்த்தேநகர், செண்பகனூர், நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நட்சத்திர ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து ஏரியில் இருந்து மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
மேலும் முக்கிய குடிநீர் ஆதாரங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மலைப்பகுதி முழுவதும் குளுமையான சூழல் நிலவி வருகின்றது.