உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்- மதியழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-04-21 10:12 GMT   |   Update On 2023-04-21 10:12 GMT
  • இந்த சுங்க சாவடியை அகற்றிட பலமுறை முயன்றும் தேசிய நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
  • திறமையான கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நிறுவனங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க பரிந்துரைக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

தமிழக சட்டசபை கூட்ட தொடரில் பர்கூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் டி. மதியழகன் பேசியதாவது:-

கிருஷ்ண கிரியில் - பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைக்கப் பட்டுள்ள சுங்க சாவடி கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. நகர் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் சுங்க சாவடி அமைக்க வேண்டும் என விதிகள் இருந்தும் அந்த விதிகளை கடைபிடிக்காமல் சுங்க சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் தினந்தோறும் பொதுமக்கள் சென்று வரக்கூடிய மாவட்ட கலெக்டர் அலுவலகம், காவல் கண்காணி ப்பாளர் அலுவலகம், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம், வேளாண்மை அலுவலகம், சுகாதார அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்ட அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு சென்று வருவதற்கு பெரும் இடையூறாக உள்ளது.

இந்த சுங்க சாவடியை அகற்றிட பலமுறை முயன்றும் தேசிய நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. ஆகையால் முதல்- அமைச்சர் இந்த சுங்கசாவடியை உடனடியாக அகற்றிட ஆவண செய்யவேண்டும். பர்கூர் மற்றும் போச்சம்பள்ளியில் அமைந்துள்ள சிப்காட் பகுதிகளில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு ஆரம்ப காலங்களில் நிலம் அளித்தவர்கள் மற்றும் உள்ளூர் பகுதியில் வசிக்கும் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. திறமையான கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நிறுவனங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க பரிந்துரைக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மாமரங்களில் தற்போது த்ரிப்ஸ் (சிறு பூச்சிகள்) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாங்காய் விளைச்சல் குறைந்தது மட்டுமல்லாமல் தரமும் குறைந்து காணப்படுகிறது. ஆதலால் "மா" மற்றும் "தென்னைக்கு" சிறந்த வேளாண் விஞ்ஞானிகளை வைத்து சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைத்து விவசாயிகளுக்கு தேவையான பூச்சிக்கொல்லிகள், சாகுபடி மற்றும் அறுவடை பற்றிய விழிப்புணர்வை வழங்கவும், "மா" செடிக்கு காப்பீடு தொகை வழங்க ஆவணச் செய்ய வேண்டும்.

காவேரிப்பட்டிணம் ஒன்றியத்துக்குட்பட்ட சந்தனூர் ஏரியிலிருந்து உபரிநீரை கொட்டாவூர், பாப்பாரப்பட்டி, சின்ன புளியம்பட்டி வையம்பட்டி, இருமத்தூர், காராமூர் மற்றும் சாமாண்டப்பட்டி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News