குலசேகரன்பட்டினம் தருவை குளத்தை நிரந்தரமாக நீர் பெறும் குளமாக மாற்ற வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
- உடன்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகள் முழுவதும் நிலத்தடிநீரில் கடல்நீர் உட்புகுந்து உப்புநீராக மாறிவருகிறது.
- தாமிரபரணி ஆற்றின் உபரி தண்ணீர் வழங்கப்படாமல் இருப்பதால்தான் விவசாய நிலம் உப்பு நிலமாக மாறி வருகிறது என மனுவில் கூறியுள்ளனர்.
உடன்குடி:
உடன்குடி பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும்பொதுமக்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
உடன்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகள் முழுவதும் விவசாய நிலமான நிலத்தடிநீரில் கடல்நீர் உட்புகுந்து குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படாத வகையில் உப்புநீராக மாறிவருகிறது.
இதை தடுப்பதற்கு உடன்குடிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் எல்லப்பநாயக்கன் குளத்து உபரிநீர் தேங்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதியில் குலசை தருவைக்குளம் மற்றும் கருமேனி ஆற்றின் கழிமுக பகுதிகளில் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றின் உபரி தண்ணீர் வழங்கப்படாமல் இருப்பதால்தான் விவசாய நிலம் உப்பு நிலமாக மாறி வருகிறது.
எனவே இந்த நிலையை மாற்றிடவும், உடன்குடி பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் தெற்கு பிரதான கால்வாய் மூலம் நிரந்தரமாக நீர்பெறும் குளங்களுள் கடைசி குளமாக விளங்கும் எல்லப்பநாயக்கன் குளத்தின் கீழுள்ள குலசை தருவைக்குளத்தையும் நிரந்தரமாக நீர்பெறும் குளங்கள் பட்டியலில் இணைத்து வருடந்தோறும் தண்ணீர் வழங்கி உடன்குடி சுற்று வட்டார பகுதிகளின் விவசாயநிலத்தடிநீர் மாறாமல் இருக்கவும் இப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயம் சிறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.