உள்ளூர் செய்திகள்

கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது

Published On 2023-08-20 08:40 GMT   |   Update On 2023-08-20 08:40 GMT
  • கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிற 23-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
  • 24-ந் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடத்தப்பட உள்ளது.

குனியமுத்தூர்,

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஈச்சனாரி விநாயகர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிற 23-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான விழா இன்று காலை 8 மணிக்கு நன்மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, திருமுறை பாராயணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இறை ஆணை பெறுதல், தூய நீராக்கல், மூத்த பிள்ளையார் வழிபாடு, மண்ணெடுத்தல், காப்பணிவித்தல், திருக்குடங்களை வேள்விச்சாலைக்கு எடுத்து வருதல், மூத்த பிள்ளையாருக்கு முதல்கால வேள்வி நடத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் இன்று நடக்கின்றன.

நாளை (21-ந் தேதி) நன்மங்கள இசை, திருமுறை பாராயணம், ஈச்சனாரி விநாயகருக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை, மூன்றாம் கால வேள்வி பூஜை உள்ளிட்டவை நடை பெறுகின்றன. வருகிற 22-ந் தேதி நன்மங்கள இசை, திருமுறை பாராயணம், நான்காம் கால வேள்வி பூஜை, 5-ம் கால வேள்வி பூஜை நடக்கிறது.

23-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நன்மங்கள இசை, திருமுறை பாராயணம் நடத்தப்படுகிறது. காலை 5.45 மணிக்கு கலைகள் நாடிகளின் வழியாக மூலத்திருமேனியை அடைதல் நிகழ்வு நடத்தப்படுகிறது. காலை 6.45 மணி முதல் 7.45 மணிக்குள் ஈச்சனாரி விநாயகர், கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபி ஷேக விழா நடத்தப்படுகிறது. அன்று மாலை 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

24-ந் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News