மக்னா யானையை விரட்ட கும்கி சின்னத்தம்பி யானை வரவழைப்பு
- வனத்துறையினருக்கு இந்த மக்னா யானை போக்கு காட்டியது.
- ஓரிரு நாட்களில் மக்னா யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி,
ஆனைமலை அருகே விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை சின்னத்தம்பி வரவழைக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானை பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த யானை சரளப்பதி அருகே கடந்த சில மாதங்களாக முகாமிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
தொடர்ந்து விளைநிலங்களை சேதப்படுத்தியும், அங்குள்ள மக்களை தாக்கவும் முற்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். ஆனால் வனத்துறையினருக்கு இந்த மக்னா யானை போக்கு காட்டியது. மேலும் வனத்துறையினரின் வாகனத்தையும் சேதப்படுத்தியது.
தற்போது யானையை பிடிக்க வனத்துறையினர் ஆயத்தமாகி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக கும்கிகளான ராஜவர்தன், கபில்தேவ் ஆகிய யானைகள் சரளப்பதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், முரட்டுத்தனமான மக்னா யானைகளை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படும் கும்கி யானையான சின்னத்தம்பியும் களமிறக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் மக்னா யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.