குருங்குளம் சர்க்கரை ஆலையை உடனே திறக்க வேண்டும்
- சர்க்கரை ஆலை ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் அரவை தொடங்கப்படும்.
- உடனடியாக சர்க்கரை ஆலை திறந்து அரவை தொடங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் இலக்கியா தலைமை தாங்கினார்.
இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் அரவை தொடங்கப்படும்.
ஆனால் நவம்பர் மாதம் முடிவடையும் இந்த தருவாயில் கூட ஆலை திறக்கப்படாமல் உள்ளது. உடனடியாக சர்க்கரை ஆலை திறந்து அரவை தொடங்க வேண்டும்.
காலதாமதமாக திறக்கப்பட்டால் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
உடனடியாக ஆலையை திறக்க வேண்டும் . மேலும் தமிழக அரசு அறிவித்த ரூ.195 டன் ஒன்றிக்காண ஊக்கத்தொகை அரசாணை வெளியீட்டும் தற்போது வரை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் ரூ.26 கோடி வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.
அப்போதுதான் அறுவடை செய்யக்கூடிய விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் தஞ்சை மாவட்டத்தில் காவிரி நீர் பாயாத ஏரி பாசனத்தை நம்பியுள்ள செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி உள்ளது .
ஆனால் தற்போது வரை ஏரிகள் நிரம்பாததால் நிலத்தடி நீரை நம்பி விவசாயிகள் உள்ளதால் உடனடியாக ஆழ்குழாய் பாசனத்திற்காக மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும்.
செங்கிப்பட்டி பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஜீவக்குமார், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர்கள் கோவிந்தராஜ் உள்பட ஏராளமான விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.