உள்ளூர் செய்திகள் (District)

பா.ஜனதா-அ.தி.மு.க. இடையே விரிசல் இல்லை: எல்.முருகன்

Published On 2023-03-26 04:40 GMT   |   Update On 2023-03-26 04:40 GMT
  • இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்கள் இடையே உள்ள பிரச்சினைகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.
  • படகுகள் விவகாரத்தில் கடந்த மாதம் 3 விசைப்படகுகளை விடுவித்திருக்கிறோம்.

மதுரை:

மத்திய மந்திரி எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்ககளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற திட்டத்தின் கீழ் ஒரு மாத காலமாக கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காசிக்கும், ராமேசுவரத்துக்கு உள்ள தொடர்பு, காசிக்கும் சிவகாசிக்கும் உள்ள தொடர்பு, காசிக்கும் தென்காசிக்கும் உள்ள தொடர்பு தெரிய வந்தது. தமிழகத்தில் உள்ள பல பகுதிகள் காசியுடன் தொடர்புடையவை.

தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர்களின் உடைகளான பட்டு ஆடைகள், தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்கள் போன்றவற்றை எடுத்து கூறுகின்ற வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது நம்முடைய சவுராஷ்டிரா தமிழ் சங்கம் சார்பில் வருகிற ஏப்ரல் 16-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு குஜராத்தில் நிகழ்ச்சிகள் நடக்கிறது. சவுராஷ்டிரா மக்கள் தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் பல பகுதிகளில் வசிக்கின்றனர்.

இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்கள் இடையே உள்ள பிரச்சினைகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுகிறார்கள் அப்போது தலையிட்டு நமது வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கிறார்.

படகுகள் விவகாரத்தில் கடந்த மாதம் 3 விசைப்படகுகளை விடுவித்திருக்கிறோம். மேலும் உள்ள விசைப்படகுகளை மீட்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழக படகுகளை விடுவிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. மீனவர்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் திட்டம் இருக்கிறது. சேதமடைந்த படகுகளுக்கும் இன்சூரன்ஸ் இருக்கிறது. மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ராகுல் காந்தி பிரச்சினையை பொறுத்தவரை காழ்ப்புணர்ச்சி இல்லை. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பா.ஜனதா-அ.தி.மு.க.வில் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News