குன்னூரில் மதுபோதையில் பெண்ணை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது
- பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி செல்ல முயற்சி செய்தார்.
- கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
நீலகிரி
வெலிங்டன், குன்னூரில் மதுபோதையில் பெண்ணை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெண்ணுக்கு பாலியல் தொல்லை நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன. சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர் மதுகுடித்து விட்டு போதையில் யார் வீட்டுக்குள்ளாவது நுழைந்து அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு மது குடித்துவிட்டு சரவணன் வெலிங்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது, அங்கிருந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் அந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி செல்ல முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் அந்த பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து சரவணனை மடக்கி பிடித்தனர். கட்டிட தொழிலாளி கைது இதுகுறித்த தகவலின்பேரில் வெலிங்டன் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணன் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததும், தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சரவணன் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.