உள்ளூர் செய்திகள் (District)

சுற்றுச்சுவர் இடிந்து தொழிலாளி பலி: கட்டிட காண்டிராக்டர் உள்பட 2 பேர் மீது வழக்கு

Published On 2024-06-25 05:21 GMT   |   Update On 2024-06-25 05:21 GMT
  • கோவை மதுக்கரையை சேர்ந்த சுப்பிமணி என்பவர் ஒப்பந்தமுறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை அருகே உள்ள பேரூரில் பேரூராட்சி சார்பில் வடக்கு ரதவீதியில் ரூ.71 லட்சத்தில் சாக்கடை வாருகால் அமைக்கும் பணி நடக்கிறது.

கோவை மதுக்கரையை சேர்ந்த சுப்பிமணி என்பவர் ஒப்பந்தமுறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சாக்கடை வாருகால் அமைக்கும் பணியில் தேனியை சேர்ந்த வேல்முருகன்(வயது49) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

தற்போது சாலையோரத்தில் சாக்கடை வடிகால் அமைக்க குழி தோண்டப்பட்டு, கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது. தோண்டப்பட்ட குழியை அளவீடு செய்யும் பணி மற்றும் மண்ணை பொக்லைன் உதவியுடன் அகற்றும் பணி நடந்தது.

நேற்று மாலை பேரூர் கோவிலுக்கு வடக்கே ஆற்றுப்பாதைக்கு முன்பு தோண்டப்பட்ட குழியில் இறங்கி வேல்முருகன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தனியார் இடத்தை சுற்றி போடப்பட்டிருந்த கருங்கல்லால் ஆன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இதில் வேல்முருகன் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் குறித்து வேல்முருகனின் மகன் மயில்சாமி பேரூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், அஜாக்கிரதையாக வேலையாட்களை பணியாற்ற வைத்து உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கட்டிட காண்டிராக்டர் செந்தில்குமார், மேஸ்திரி சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.

Tags:    

Similar News