நான்குவழிச்சாலை பணிக்காக வைக்கப்பட்டவை- பாவூர்சத்திரம் பகுதியில் சாலையில் சாய்ந்து கிடக்கும் பேரிகார்டுகள்
- நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டிகளின் எச்சரிக்கைக்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
- காற்றின் வேகத்தால் பேரிகார்டுகள் சாலையிலேயே விழுந்து கிடக்கிறது.
தென்காசி:
பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டை கடந்து தென்காசி செல்லும் சாலையில் செல்வவிநாயகர்புரம் உள்ளது. இங்கு அமைந்துள்ள தனியார் மருத்துவமனை அருகே நான்குவழிச்சாலை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதன் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டிகளின் எச்சரிக்கைக்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி செல்வ விநாயகர்புரம் பகுதியிலும் ஒருபுறம் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் மற்றொரு புறம் வழியாக வாகன ஓட்டிகள் செல்லும் வகையில் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு அமைக்கப்ப ட்டுள்ளது.
அந்த பேரிகார்டுகள் காற்றின் வேகத்தால் சாலையிலேயே விழுந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் நான்கு வழிச்சாலையில் அந்த பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது தெரியாமல் யாரேனும் மின்னல் வேகத்தில் வாகனங்களில் வந்தால், அவை விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி பேரிகார்டுகளை கீழே விழாதவாறு அதன் கீழ் பகுதியில் மண் மூடை உள்ளிட்டவை வைத்து சாயாத வண்ணம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.