நெல்லையில் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
- வக்கீல்கள் திரண்டு மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்தனர்.
- நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக தொழில் செய்து வரும் அருள்மணி என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு பாளை கே.டி.சி. நகர் சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது அவரை இரவு பணியில் இருந்த ஏட்டு பிபின் தடுத்து நிறுத்தியதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட தாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து வக்கீல்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் நேற்று வக்கீலால் தாக்கப்பட்டு காயம் அடைந்ததாக கூறி போலீஸ் ஏட்டு பிபின் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இதற்கிடையே வக்கீல் மீது பொய் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்து இருப்பதாக கூறி நெல்லை மாவட்ட வக்கீல்கள் திரண்டு மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி ஏட்டு பிபினை நேற்று ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்கள்.
இந்நிலையில் அந்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இன்று நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் பாரதி முருகன், பொருளாளர் ராஜா, உதவி செயலாளர் சிதம்பரம், நூலகர் இசக்கி பாண்டியன் மற்றும் முத்துராஜ், உதயகுமார் வழக்கறிஞர்கள் முன்னாள் செயலாளர் செந்தில் குமார் அமல்ராஜ், வினோத் குமார், ராஜா முகமது, லெட்சுமணன், ரமேஷ்,இசக்கி, கார்த்திக், தம்பான், அருண்குமரன், ராஜன்,அஜீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.