தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க லைட்டர்களை தடை செய்ய வேண்டும் - மத்திய அமைச்சரிடம் கடம்பூர் ராஜூ மனு
- தென் மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக இருந்து வருவது தீப்பெட்டி தொழில்.
- சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்
கோவில்பட்டி:
தென் மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக இருந்து வருவது தீப்பெட்டி தொழில். நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் 90சதவீதம் பேர் பெண்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர். மூலப் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் பல்வேறு நிலைகளை தீப்பெட்டி தொழில் சந்தித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ரூ10-க்கு விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டரால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை, முன்னாள் அமைச்சரும், எம்.எல். ஏ.வுமான கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தார்.
மேலும் சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவையும் அளித்தார்.
அப்போது தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நேஷனல் சிறு தீப்ங உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம், துணைத்தலைவர் கோபா ல்சாமி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் சுரேஷ், சாத்தூர் சங்க கிளை தலைவர் லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.