உள்ளூர் செய்திகள் (District)

கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்து பயனடையலாம் -கலெக்டர் தகவல்

Published On 2022-11-08 10:14 GMT   |   Update On 2022-11-08 10:14 GMT
  • ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
  • அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன் பெறலாம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ண கிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் விவசாயிகளின் கால்நடைகளை பாதுகாத்திடும் வகையில் தமிழக அரசின் 2022&23&ம் ஆண்டிற்கான தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 1,900 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

காப்பீடு செய்யும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு மானியமாக காப்பீடு சந்தா தொகையில் 70 சதவீத மானியமும், பொதுப்பிரிவினர்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொறுத்தப்பட்டு புகைப்படம் எடுக்கப்படும். காப்பீடு செய்த கால்நடைகள் இறக்க நேரிட்டால் கால்நடை உதவி மருத்துவரால் இறந்த கால்நடையை பிரேத பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழ் உடன் காப்பீட்டு நிறுவனத்தில் ஒப்படைத்து காப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விருப்பம் உள்ள கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை அரசு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News