தென்காசியில் சுய உதவிக் குழுக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள்- கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை, முதல்-அமைச்சர் தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.
- 14,236 பேருக்கு வழங்கப்பட்ட ரூ.43 கோடியே 7லட்சத்து 14 ஆயிரத்து 42 அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் சுய உதவிக் குழுக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கினார்.
பின்னர், கலெக்டர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-,
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம், 31.03.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை, முதல்-அமைச்சர் கடந்த 31.12.2021 அன்று தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.
அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களான நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 1,392 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 14,236 உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்தம் ரூ.43 கோடியே 7லட்சத்து 14 ஆயிரத்து 42 அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தற்கான சான்றிதழ்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் லட்சுமணக்குமார், இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சுபாஷினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.