லிதுவேனியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த ஊத்துக்கோட்டை என்ஜினீயர்
- இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
- கமிலே டெக்னைன் கைடேயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை சாவடி தெருவை சேர்ந்தவர் சூரிய குமார். இவர், இத்தாலி நாட்டின் அருகே உள்ள லிதுவேனியா நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் படிக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார்.
அப்போது அவருக்கு அதே பல்கலைக்கழகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு பட்டய படிப்பு படித்த அதே நாட்டைச் சேர்ந்த கமிலே டெக்னைன் கைடே என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
கமிலே டெக்னைன் கைடேக்கு வனவிலங்குகள் மீது பற்று அதிகம். அதே போல் சூரியகுமாருக்கும் வனவிலங்குகள் மீது ஆர்வம் அதிகம். இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். நாளடைவில் இது காதலாக மாறியது.
படிப்பு முடித்ததும் அதே நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருவரும் வேலைக்கு சேர்ந்தனர். இதனால் இருவரது காதலும் மேலும் இறுகியது.
இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து கமிலே டெக்னைன் கைடே-சூரிய குமாரின் திருமணம் இன்று காலை ஊத்துக்கோட்டை செட்டி தெருவில் உள்ள பெரிய ஆண்டவர் கோவிலில் தமிழக பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. கமிலே டெக்னைன் கைடேயின் கழுத்தில் சூரியகுமார் தாலிகட்டியதும் உற்சாக குரல் எழுப்பினர்.
இதில் கமிலே டெக்னைன் கைடேயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாரம்பரிய உடையான பட்டுப் புடவை அணிந்து வந்து கலக்கினர்.