மினி லாரியில் கடத்தப்பட்ட 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்
- மினி லாரியில் கடத்தப்பட்ட 3 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- இதையடுத்து லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
திருமங்கலம்
திருமங்கலம் சுற்று வட்டார பகுதியில் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பட்டை தீட்டி அதிக விலைக்கு விற்பதாக அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் வந்தன.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் வட்டாட்சியர் சிவராமன், வருவாய் துறையினர் ரேசன் அரிசி பதுக்கி வைத்து இருப்பவர்களை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி நேற்று அதிகாரிகள் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி- செங்கப்படை தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் சிவராமன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள் மறித்தனர். இதையடுத்து லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
தொடர்ந்து லாரியை சோதனை செய்தபோது அதில், 60 கிலோ எடையுள்ள 59 முடைகள் ரேசன் அரிசி கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த எடை 3 டன் ஆகும். வட்டாட்சியர் சிவராமன் ரேசன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தார். சோதனையின் போது வட்ட வழங்கல் அலுவலர் வீரமணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் இருந்தனர்.