- கஞ்சா விற்ற 4 வாலிபர்களை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.
- தப்பி ஓடிய வசந்தகுமார், வாழைத்தோப்பு நந்தகோ பால் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
கீரைத்துறை சுடுகாட்டு பகுதியில் கஞ்சா கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று இரவு மின்சார சுடுகாடு பகுதிக்கு ரோந்து சென்றனர். அங்கு 6 பேர் கும்பல் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது 4 பேரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட 4 பேரிடமும் சோதனை நடத்தினர். அவர்களிடம் 1.450 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் சிந்தாமணி, சங்கு பிள்ளை மடம் முருகன் மகன் மணிகண்டன் என்ற ஒன்னரை மணி (22), சிந்தாமணி, வீமாபிள்ளை சந்து முருகன் மகன் மணிமாறன் என்ற குட்டை மணி (19), திருப்பரங்குன்றம், வடக்கு ரத வீதி ஆறுமுகம் மகன் முத்துப்பாண்டி (19), மேல அனுப்பானடி, பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஆயுதங்களுடன் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த மேற்கண்ட 4 பேரையும் கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.
தப்பி ஓடிய வசந்தகுமார், வாழைத்தோப்பு நந்தகோ பால் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.