முத்திரையிடாத 95 எடை அளவைகள் பறிமுதல்
- மேலூரில் முத்திரையிடாத 95 எடை அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- தொழிலாளர்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மதுரை
மேலூர், திருச்சி மெயின்ரோடு, செக்கடி, தினசரி மார்க்கெட் மற்றும் மாட்டுத்தாவணி பகுதிகளில் உள்ள கடைகளில் அரசு முத்திரையில்லாத தராசுகள் பயன்படுத்தப்படுவதாக தொழிலாளர்துறைக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டு தலின்படி உதவி ஆணை யர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது முத்திரையிடாத 18 எலக்ட்ரானிக் தராசு, 24 மேசைத்தராசு, 2 விட்ட தராசு, 35 இரும்பு எடைக்கற்கள், 15 உழக்குகள், ஒரு ஊற்றல் அளவை என மொத்தம் 95 எடை அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அதிக பட்சத்தைவிட கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்கள் விற்ற 2 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இது குறித்து தொழிலாளர் உதவி கமிஷனர் மைவிழி செல்வி கூறுகையில், முத்திரையிடாத, தரமற்ற எடை அளவுகளை பயன்ப டுத்துதல், எடைகுறைவு, சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்வது உள்பட நுகர்வோர் நலன் பாதிக்கும் வகையில் செயல்படும் வியாபாரிகளுக்கு சட்டப்படி அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இது போல தவறு செய்தால், வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் தராசு முத்திரையிடும் பணிகள் labour.tn.gov.in இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. வியாபாரிகள் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு தராசு முத்திரையிடுவதற்கான நாள் ஒதுக்கீடு செய்யப்படும். அவர்கள் சிரமமின்றி முத்திரையிட்டு பயன்பெறலாம் என்றார்.