கப்பலூர் நான்கு வழிச்சாலையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்
- கப்பலூர் நான்கு வழிச்சாலையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை தடுக்க ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
- டிரைவர் இல்லாத லாரிகளில் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது அதிகரித்துள்ளது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சிப்காட் தொழிற்சாலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பட்டு வருகின்றனர். வெளி மாநில மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் சரக்குகள் வந்த வண்ணம் இருக்கும்.
சரக்குகளை கொண்டு வரும் லாரி டிரைவர்கள் வாகனத்தை கப்பலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் நிறுத்தி ஓய்வு எடுப்பது வழக்கம். இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் ஆள் நடமாட்டம் குறைந்து இருக்கும்.
இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களில் வரும் வழிப்பறி கும்பல்கள் லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பது தொடர் கதையாக நடந்து வருகிறது. டிரைவர் இல்லாத லாரிகளில் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது அதிகரித்துள்ளது.
இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் டிரைவர்கள் வாகனங்களை நிறுத்த அச்சமடைந் துள்ளனர். நெடுஞ்சாலை களில் குற்றங்களை தடுக்கவும், விபத்தின் போது துரிதமாக செயல்ப டவும் ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கப்பலூர் நான்கு வழிச்சாலை பகுதியில் போலீசாரின் மெத்தனம் காரணமாக சமூக விரோத கும்பல்கள் லாரி டிரைவர், தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் கவனம் செலுத்தி நான்கு வழிச்சாலைகளில் கைவரிசை காட்டும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது.
லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் பணம் பறிப்பு
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது21). லாரி டிரைவரான இவர் சென்னையில் இருந்து நெல்லைக்கு லாரியை ஓட்டி வந்தார். மதுரை மாவட்டம் கப்பலூர் அருகே உள்ள கருவேலம்பட்டி பிரிவு பகுதிக்கு சென்ற போது அங்கு 2 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது. இதை பார்த்த ராஜேஷ் உடனே லாரியை நிறுத்தி காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜேசை மிரட்டி செல்போன், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதே போல் கவாஸ்கர் என்பவரிடம் வழிப்பறி கும்பல் பணத்தை பறித்துக் கொண்டு சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.