போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணிப்பு
- திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
- எந்த கோரிக்கையிலும் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் வேட்டை யன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஆணையாளர்கள் அன்பரசு, ராமர் ஆகியோர் கூட்டத்தை நடத்தினர்.
கூட்டம் நடைபெறு வதற்கு முன்பாக அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பி னர் நிலையூர் முருகன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆணையாளரை சந்தித்து தங்களது வார்டு பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கை களை நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் திட்டப்பணிகள் செய்ய முடியவில்லை. நிதி ஒதுக்காததை கண்டித்து இன்றைய கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி சென்றனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் நிலையூர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு மக்களுக்கான திட்டப்பணிகள் செய்யப்பட்டது. அதே சமயத்தில் தற்போது தி.மு.க. ஆட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆன சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்த கோரிக்கையிலும் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்றார்.