திருமங்கலம் நகர்மன்ற கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆலோசனை
- திருமங்கலம் நகர்மன்ற கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆலோசனை நடந்தது.
- முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தார். ஆணையாளர் டெரன்ஸ்லியோன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் திருமங்கலம் நகராட்சியின் அடிப்படை தேவைகளான சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதிகள் செய்து கொடுப்பது, பாதாள சாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காண்பது, கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் ஆகியோர் நகர் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தனர்.
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடும் வகையில் திருமங்கலம் நகரின் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைத்திடவும், கழிவுநீரை அகற்றிட ரூ.64 லட்சம் செலவில் அதிநவீன வாகனம் வாங்கிட நிதி ஒதுக்கீடு செய்து தந்த தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.