வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை-பா.ஜ.க. நிர்வாகி பேட்டி
- தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை,
- மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி செயற்குழு கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகி பேசினார்.
திருமங்கலம்
மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி செயற்குழு கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் ஜி.கே நாகராஜ் பங்கேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் ரத்தினசாமி, சுரேஷ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சசிகுமார், விவசாய அணி மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டி, மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ், சிறப்பு அழைப்பாளர்களாக மள்ளர்சேனை ராஜ தேவேந்திரன், அகில பாரதிய சந்த்சமிதி ஒருங்கிணைப்பாளர் வீரபூமிநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பின்னர் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது:-
திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் அதிகளவில் மல்லிகை மலர் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்காக இந்த பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். நிலையூர் கண்மாயை தூர்வார வேண்டும்.
திருமங்கலம், திருப்பரங்கு ன்றம் பகுதிகளில் பூங்காக்கள் அமைக்க வேண்டும். நீர் பிடிப்பு பகுதிகளில் கருவேல மரங்கள் அதிகளவில் இருப்பதால் அதனை அகற்ற வேண்டும். எம்.கல்லுப்பட்டியில் இருந்து மயிலாடுதுறை வழியாக கடமலைக்குண்டு செல்லும் மலைப்பாதையை விரிவாக்கம் செய்து சீரமைக்க வேண்டும். சாப்டூரில் இருந்து சந்தையூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.
டேரா பாறை என்ற அணை 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.அதன் பின்பு 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.அதன் பின்பு இன்றுவரை இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கான ஆய்வு பணியை தொடங்க வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்ற கோரி விரைவில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் கண்துடைப்பு. உதாரணத்திற்கு ரூ.350 கோடி வாடகைக்கு விடுவதற்காக எந்திரங்களை வேளாண்மை பொறியியல் துறை அறிவித்துள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.26 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் வாங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது.
அப்படி இருக்கும்போது மீண்டும் ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்து எந்திரங்களை வாங்கி வீணடிப்பது தவறு. தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.