எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்
- மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி லோகோவில் தமிழிலும் பெயர் இருக்க வேண்டும்.
- மத்திய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதினார்.
மதுரை
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடையாள சின்னத்தில் (லோகோ) தமிழ் மொழியில் பெயர் சேர்க்கப்பட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
இதுவரையில் பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு, நிறுவனக் குழு கூட்டங்களில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் நிறுவனத்துக்கான அடையாளச் சின்னத்தை (லோகோ) இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் லோகோவில் தமிழ் மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதை அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ் மொழியிலும் அடையாள சின்னம் உருவாக்கப்படுவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.