உள்ளூர் செய்திகள்

விசைத்தறிகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-09-29 08:21 GMT   |   Update On 2022-09-29 08:21 GMT
  • விசைத்தறிகளுக்கு மின்னணு பலகை பொருத்த அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
  • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள சாதாரண விசைத்தறிகளில் உற்பத்தி செய்யும் போது நூலிழைகள் அறுந்து உற்பத்தி நேரம் குறைவதால் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் குறைகிறது.

இதனை சீரமைத்து உற்பத்தி திறனை அதிகரிக்க விசைத்தறிகளுக்கு மின்னணு பலகை பொ ருத்தப்படும். முதற்கட்டமாக 5 ஆயிரம் விசைத்தறிகளில் மின்னணு பலகை பொருத்த 50 சதவீதம் மானியமாக ரூ. 6 கோடி வழங்கப்படும் என அமைச்சரால் சட்ட ப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் 250 விசைத்தறிகளில் அரசின் 50 சதவீத மானிய உதவியில் மின்னணு பலகை பொருத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கூட்டுறவு மற்றும் தனியார் விசைத்தறியாளர்கள் மூலம் விண்ணப்பம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 5 விசைத்தறிகள் வரை மானியம் பெற முடியும். தமிழக அரசின் இலவச மின்சாரம் மூலம் பயன்பெற்றவர்கள் மற்றும் விசைத்தறிகள் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் இதற்கு முன் மானியம் பெறாதவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

தறிகள் இயங்கும் இடம் வாடகை கட்டிடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம் பெறப்படும். விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி, தகுதி உள்ளோர் பட்டியல் வெளியிடப்படும். தகுதி உள்ளவர்கள் தங்களது பங்குத் தொகையாக தறி ஒன்றுக்கு சுமார் ரூ.12 ஆயிரம் வரை கைத்தறித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு மதுரை சரக கைத்தறித்துறை உதவி இயக்குநர் வெங்கடேசலு, மதுரை உதவி அமலாக்க அலுவலர் ரவிக்குமார் ஆகியோரை 99940 20969, 98943 18116 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News