அய்யனார் கோவில் கோபுர கலசங்கள் திருட்டு
- சோழவந்தான் அருகே அய்யனார் கோவில் கோபுர கலசங்கள் திருடு போயின.
- இதுகுறித்து காடுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூவலிங்க அய்யனார் கோவில் உள்ளது. விசேஷ நாட்களில் இங்கு அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
அய்யனார் கோவிலில் பிச்சைக்கண்ணு என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து விநாயகர் சன்னதி விமான கோபுரத்தில் உள்ள கலசங்களை திருடி சென்றனர். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த பிச்சை கண்ணு கலசங்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் காடுப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கோபுர கலசத்தை திருடியது இரிடியம் விற்கும் கும்பலா? எனவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.