உள்ளூர் செய்திகள்

தொண்டி ஜெட்டி பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த தடை-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2023-01-20 09:17 GMT   |   Update On 2023-01-20 09:17 GMT
  • இடியும் நிலையில் உள்ள தொண்டி ஜெட்டி பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
  • கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொண்டியில் மீன்பிடி இறங்குதளம் சிறு துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மதுரை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்த வரும், மனிதநேய மக்கள் கட்சி வக்கீல் அணி துணை அமைப்பாளருமான கலந்தர் ஆசிக் அகமது மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொண்டியில் மீன்பிடி இறங்குதளம் சிறு துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக தொண்டி கடல் பகுதியில் கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறிய ஜெட்டி பாலம் கட்டப்பட்டது. கடலில் இருந்து கொண்டு வரப்படும் பொருள்களை இறக்கி வைக்கவும், படகுகளை கட்டி வைத்துக் கொள்ளவும் இந்த பாலம் பயன்பட்டு வந்தது.

சேது சமுத்திரத் திட்டம் திரும்ப பெறப்பட்ட நிலையில் ஜெட்டி பாலம் பராமரிப்பின்றி சேதம் அடையத் தொடங்கியது. அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டியில் கப்பல் படை வீரர்கள் இந்த பாலத்தை ஹெலிகாப்டர் இறங்குதளமாக பயன்படுத்தி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பின்னர் கப்பல் படையும் அங்கிருந்து இடம் மாறியதால் மீண்டும் ஜெட்டி பாலம் பராமரிப்பின்றி உள்ளது.

தற்போது தொண்டி பகுதி மக்கள் பொழுதுபோக்கு இடமாக பயன் படுத்தி வருகின்றனர்.

ஆனால் அந்த பாலம் தற்போது காரைகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது. எனவே இந்த பாலம் அடைந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் ஜெட்டி பாலத்தை சீரமைத்து தொண்டி மக்களின் பொழுதுபோக்கு தளமாக ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, சேத மடைந்த நிலையில் உள்ள பாலம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். அவற்றை பார்த்த நீதிபதிகள், பாலத்தின் தன்மை குறித்து போலீஸ் மற்றும் உரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்கள் யாரும் பாலத்தில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பாலத்தின் உறுதி தன்மையை ஆராயும் வரை அதை பொதுமக்கள் பயன்படுத்த க்கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Tags:    

Similar News