தமிழகத்தில் என்றுமே பா.ஜ.க. வளராது: மாணிக்கம் தாகூர் எம்.பி. பேச்சு
- தமிழகத்தில் என்றுமே பா.ஜ.க. வளராது என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
- பெட்ரோல், டீசல், கியாஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை யேற்றத்தால் பா.ஜ.க. மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா, தியாகி மாயாண்டி தேவர் நினைவு கொடிக்கம்பம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழனிகுமார் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன், பணியாளர் நலன் தெற்கு மாவட்ட தலைவர் பொன்.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசு குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாமல் 7 அரை கோடி பேருக்கு வங்கி கணக்கை தொடங்கி வைத்தது. ஆனால் தற்போது அந்த வங்கி கணக்கு மூலம் ஏழைகளிடம் குறைந்தபட்சம் பணம் இல்லை எனக்கூறி வங்கிகள் பணத்தை பிடுங்கி வருகின்றது.
காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை கூறிய சீமானை வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 7 பேரின் விடுதலை சட்ட விரோதமானது.
தமிழகத்தில் பா.ஜ.க. வில் ரவுடிகளும், மோசடி பேர்வழிகளும் இணைந்துள்ளனர். இதைப்பார்த்து அமைச்சர் பா.ஜ.க. அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது என கூறியிருக்கலாம். பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் மனதில் என்றுமே இடமில்லை. தமிழக மண் எப்போதும் பா.ஜ.க.விற்கு எதிரானது. அவர்கள் இங்கு என்றுமே வளர முடியாது. பெட்ரோல், டீசல், கியாஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை யேற்றத்தால் பா.ஜ.க. மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், காசிநாதன், கார்த்திக், வினோத் ராஜா, சவுந்தரபாண்டியன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.