- தங்கையை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் அரசு பஸ் கண்டக்டரை தாக்கினார்.
- மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). இவர் அரசு போக்குவரத்து கழக பொன்மேனி டிப்போ பணிமனையில் கண்டக்ட ராக வேலை பார்த்து வரு கிறார்.
இந்த நிலையில் பால முருகன் ஆரப்பாளையம்- மாட்டுத்தாவணி அரசு பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது அவர் பஸ்சில் இருந்த ஒரு இளம்பெண்ணை கேலி-கிண்டல் செய்ததாக தெரிகிறது. அந்த பெண் இதுதொடர்பாக தனது சகோதரர் மதன்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த பஸ் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கண்டக்டர் பாலமுருகனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் கண்டக்டரை 2 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் சம்பந்தப்பட்ட 2 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வை யில், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில், மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கண்டக்டரை தாக்கிய 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் ஆரப்பாளையம் மோகன் மகன் மதன்குமார் (வயது 23), மேல பொன்னகரம் நாகராஜ் மகன் தினேஷ் (23) என்பது தெரிய வந்தது.
பிடிபட்ட மதன்குமார், தனது தங்கையை அரசு பஸ் கண்டக்டர் பாலமுருகன் கிண்டல் செய்ததால் அவரை தனது உறவினர் நாகராஜூடன் வந்து தாக்கியதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பால முருகனை தாக்கிய 2 பேரையும் மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.